Last Updated:Mar 09, 2026 5:03 PM IST
தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தலில் திருச்சி சிவா, கான்ஸ்டைண்ட் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே. சுதீஷ், தம்பிதுரை, அன்புமணி ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், அசாம், பிகார் உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த 37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடைய உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் என்.ஆர். இளங்கோ, செல்வராசு, திருச்சி சிவா, கனிமொழி சோமு, தம்பிதுரை, ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2 ஆம் தேதி முடிவடைய உள்ளது.
இந்த 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 16 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டைண்ட் ரவீந்திரன், கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இதேபோல், அதிமுகவில் இருந்து தம்பிதுரையும், கூட்டணியில் இருக்கும் பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கடந்த மார்ச் 6ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து மேற்குறிப்பிட்ட ஆறு பேரைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரி, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை போட்டியிட்டவர்களுக்கு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நியூஸ்18க்கு பிரத்யேக பேட்டி அளித்த தேமுதிக பொருளாளரும், எம்.பி.யாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ள எல்.கே. சுதீஷ், “தேமுதிக சார்பில், நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்பது விஜயகாந்தின் கனவு. அது தற்போது நிறைவேறியுள்ளது. நிச்சயம், மக்களுக்காக மாநிலங்களவையில் செயல்படுவேன்” எனத் தெரிவித்தார்.
.png)





English (US) ·