தமக்குத் தெரிந்து ஐந்தாறு தலைமுறைகளாகத் தங்கள் குடும்பத்தினர் கிட்டியாட்டத்தைக் கற்பித்துவருவதாகக் கூறினார் திரு கோபி ஆறுமுகம்.
தஞ்சாவூரின் கண்ணந்தங்குடி இவரது சொந்த ஊர். ஏறத்தாழ 25 ஆண்டுகளாகக் கிட்டியாட்டத்தில் பங்கெடுத்து, கற்பித்து வருபவர். சிங்கப்பூரிலும் இவர் பயிலரங்குகளை நடத்தியுள்ளார்.
நாட்டுப்புற நடன வகையைச் சேர்ந்த கிட்டியாட்டம், நடனத்தின் நயத்தையும் போர் வீரரின் துடிப்பையும் ஒருசேர வெளிப்படுத்தக்கூடியது.
ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட காலத்தில் சிலம்பாட்டம் போன்ற தற்காப்புக் கலைகளைப் பொதுமக்கள் பயிலத் தடை விதிக்கப்பட்டபோது, போர்ப் பயிற்சியைக் கலை என்ற போர்வையில் மேற்கொள்ள முன்னோர் கையாண்ட வழி இது என்கிறார் கோபி. அறிவார்ந்த முறையில் சலங்கையைச் சேர்த்து நடனமாக மாற்றிய முன்னோர்களின் திறமையை அவர் வியந்தார்.
கிட்டியாட்டத்தின் மூன்று வகைகள்
கிட்டி, சிலம்பக் கிட்டி, சலங்கைக் கிட்டி ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆடப்படும் மூன்று வகையான கிட்டியாட்டங்கள் குறித்துத் தமிழ் முரசின் ‘ஆய கலை அரிய கலைஞர்’ வலையொளித் தொடருக்கு அளித்த நேர்காணலில் கோபி விளக்கினார். செய்முறை விளக்கமாக அது அமைந்தது.
கிட்டியாட்டத் தாளக் கருவிகளை வாசித்துக் காட்டிய ஆசான் கோபி ஆறுமுகம், கிட்டியாட்டக் கலைஞர் ரமேஷ் சண்முகம் (வலது). - படம்: பே கார்த்திகேயன்
‘கிட்டி’ எனப்படும் மரக்குச்சிதான் இந்த நடனத்தின் உயிர்நாடி. காரை எனப்படும் முள் மரத்தின் கிளைகளை வெட்டி, கிட்டி செய்யப்படும் முறையை அவர் விவரித்தார்.
பெரும்பாலும் காலாட்படை வீரர்களுக்கான இந்தப் பயிற்சி, திடீரென அமர்ந்து குதிரை வீரர்களிடமிருந்து தப்பித்துக்கொண்டு, சட்டென எழுந்து அவர்களையே தாக்கும் முறைக்கும் பயிற்சி அளிக்கிறது என்றார்.
முக்கியமாக, சூரியனைச் சுற்றிக் கோள்கள் இயங்குவதன் அடிப்படையில் இந்தக் கிட்டியாட்டப் பயிற்சி அமைவதை கோபி எடுத்துக்கூறினார். வாத்தியங்களை வாசிப்போரும் ஆசானும் நடுவில் நின்றிருக்க, கிட்டியாட்டம் பயில்வோர் வட்டமாக அணிவகுத்து (சில நேரங்களில் பல வட்டங்கள்) கிட்டியாட்டம் ஆடுவதை அவர் விளக்கினார்.
ஆடுவோர் தாளத்திற்கு ஏற்ப முன்னும் பின்னும் நகர்வார்கள். இது எதிரியைச் சூழ்ந்து தாக்கும் போர் முறைக்கு ஈடானது.
முதலில் மெதுவாகத் தொடங்கும் ஆட்டம், நேரம் செல்லச் செல்ல அதிவேகத்தை அடையும். எந்த நிலையிலும், கால்கள் இசைக்கேற்ப எடுத்துவைக்கும் அடிதான் மிக முக்கியம். நூற்றுக்கணக்கானோர் பெருந்திரளாக ஆடும் கிட்டியாட்டத்தில் ஒருவர் தவறு செய்தாலும் ஒட்டுமொத்தமாக அது சீர்குலைந்துவிடும் என்றார் கோபி.
சிலம்பக் கம்பின் அளவிலான கிட்டியைக் கொண்டு ஆடப்படும் சிலம்பக் கிட்டியாட்டம் சிலம்பத்திலிருந்து மாறுபடும் விதத்தை விவரித்தார். சலங்கைக் கிட்டியாட்டம் வில்லேந்துவோர்க்கான மறைமுகப் பயிற்சி என்று செய்துகாட்டினார்.
பெரும்பாலும் 20 நாள்களில் ஒருவர் இதைக் கற்றுக்கொள்ள முடியும். இருந்தாலும் கற்றுக்கொள்பவரின் புரிதல் திறனுக்கேற்பக் கிட்டியாட்டம் மெருகேறும். ஊர்த் திருவிழாவிற்காக நகர்ப்புறப் பகுதிகளிலிருந்து வரும் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் இதை விரும்பிக் கற்றுக்கொள்வதாக கோபி கூறினார்.
கைத்தொலைபேசி, இணையம், கணினி விளையாட்டுகள் எனச் சிறுவர்களை ஈர்க்கும் பல்வேறு அம்சங்களுக்கு இடையே இந்தக் கிட்டியாட்டத்தில் ஈடுபட அவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் உத்திகளை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
கிட்டியாட்டத்தின் பலன்கள்
இந்தக் கிட்டியாட்டம், இன்றைய தலைமுறைக்குக் கலைப்பயிற்சியாகவும் அதேவேளையில் சிறந்த உடல், உளப்பயிற்சியாகவும் அமையும் என்று கூறிய அவர், கிட்டியாட்டப் பயிற்சி மூலம் துடிப்புமிக்க இந்தியப் பாரம்பரியக் கலையில் வல்லமை கிடைப்பதோடு கவனக்குவிப்பு, உடலுறுதி, ஆளுமைத்திறன் என வாழ்வியல் முக்கியத்துவம் வாய்ந்த இதர அம்சங்களிலும் இளையர்கள் சிறந்து விளங்குவதைக் காணமுடிவதாகச் சொன்னார்.
மரபு சார்ந்த ஒரு கலையைக் கற்றுக்கொண்டு அதை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டுசெல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தை கோபி வலியுறுத்தினார்.
.png)





English (US) ·