பிரதமர் மோடியும் மேற்குவங்க முதல்வரான மம்தாவும் அதிபர் வருகையின்போது நெறிமுறை மீறிய விவகாரத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். - படம்: இண்டியன் எக்ஸ்பிரஸ் இணையம்
புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்துக்கு அதிபர் திரௌபதி முர்மு வருகையளித்தபோது நெறிமுறை மீறல் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் வாக்குவாதம் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது.
பிரதமர் நரேந்திர மோடியும் முதல்வர் மம்தா பானர்ஜியும் ஒருவரையொருவர் இலக்காக வைத்து மோதிக்கொண்டனர் என்று ‘த இண்டியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்ட செய்தி தெரிவித்தது.
டெல்லியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மம்தா அரசாங்கத்தை அதிபரை அவமதித்ததற்காகச் சாடினார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மோசமான அரசியல் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் கூறினார்.
“அதிபரின் திட்டத்தைப் புறக்கணிப்பதும் தவறாக நிர்வகிப்பதும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் இந்த நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் ஏற்பட்ட அவமானம். மக்கள் இந்த அதிகார ஆணவத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்,” என்று டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அதிபர் முர்முவை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
இது, பிரதமரின் ‘பாசாங்கு’ மற்றும் ‘தேர்தல் தோரணை’ என்று அவர் குற்றம்சாட்டினார்.
ஒரு புகைப்படத்தை உயர்த்திப் பிடித்துக் காட்டிய அவர், “பிரதமர் மோடி, உங்களுக்கு ஒரு படத்தைக் காட்டுகிறேன். ஒரு பெண் மற்றும் பழங்குடித் தலைவரான அதிபர் முர்முவுக்கு நீங்கள் மரியாதை செலுத்துகிறீர்களா? அதிபர் நிற்கும்போது நீங்கள் ஏன் அமர்ந்திருக்கிறீர்கள்? யார் மரியாதை செலுத்துகிறார்கள், யார் மரியாதை செலுத்துவதில்லை என்பதற்கு இந்தப் படம் ஒரு சான்று,” என்றார்.
“அதிபர் வருகையளித்த நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை. இதை ஒரு தனியார் அமைப்பு ஏற்பாடு செய்தது. மாநில அரசு ஒரு கடிதம் அனுப்பியது. அதில் இந்திய அதிபரை உள்ளடக்கிய ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் திறன் அந்த அமைப்புக்கு இல்லை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டது,” என்றும் மம்தா தெரிவித்துள்ளார்.
.png)





English (US) ·