மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் - படம்: இபிஏ
சைபர்ஜெயா: மத்திய கிழக்குப் பூசல் மோசமடைந்தால், அமைச்சர்களின் சம்பளத்தைக் குறைப்பது குறித்துப் புத்ரஜெயா பரிசீலிக்கத் தயாராக இருக்கிறது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.
இருப்பினும் அமைச்சர்களின் ஊதியம் ஏற்கெனவே குறைவாகவே உள்ளது என்றார் அவர்.
“அவர்கள் சிறப்பாகச் செயல்படுவதுதான் முக்கியம்,” என்று திரு அன்வார் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) தெரிவித்தார்.
“என்னைப் பொறுத்தவரை, சம்பளம் இல்லை என்றால் பரவாயில்லை. அமைச்சர்கள் சிறப்பாகச் செயல்படும்வரை, வருமானம் என்பது அவர்களின் உரிமை. அது நியாயமானது என்றே நினைக்கிறேன்.
“இருந்தாலும் பொருளியல் மோசமடைந்தால் சம்பளத்தைக் குறைப்பது குறித்துப் பரிசீலிக்க எந்தத் தடையும் இல்லை,” என்றார் மலேசியப் பிரதமர்.
விரிவான கண்ணோட்டத்தில் நிதிக் கொள்கையைக் கடுமையாக்குவதன் ஒரு பகுதியாக அமைச்சர்களின் சம்பளத்தைக் குறைப்பது குறித்த யோசனையை இந்தோனீசியா முன்மொழிந்துள்ளது. அத்தகைய நிலையை மலேசியா பின்பற்றுமா என்று திரு அன்வாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு மலேசியப் பிரதமர் பதலளித்திருந்தார்.
மற்றொரு நடப்பில், மின்வாகன ஆலைகளை நிறுவுவது குறித்துத் திரு அன்வார் பேசியிருந்தார். முதலீடு, வர்த்தக, தொழில் அமைச்சைச் சந்தித்து, அத்தகைய ஆலைகளை அமைப்பதற்கான நிபந்தனைகள் பற்றி விவாதிக்கப்போவதாக அவர் சொன்னார்.
மின்வாகன ஆலைகளுக்கான நிபந்தனைகளை மறுஆய்வு செய்யுமாறு பேராக் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) கோரிக்கை விடுத்திருந்தார்.
கடுமையான சில கொள்கைகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குறைக்கக்கூடும் என்று அந்த மாநிலத்தின் தொழில், முதலீட்டுக் குழுத் தலைவர் லோ சு யீ அக்கறை தெரிவித்திருந்தார். நாட்டின் நீண்டகால நலன்களையும் ஒட்டுமொத்த அனுகூலங்களையும் கவனத்தில் கொண்டு அத்தகைய கொள்கைகள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
.png)



English (US) ·