தவெக ஏற்கெனவே நடைமுறையில் திட்டங்களையே வாக்குறுதிகளாக அளித்தா? விமர்சனமும் விளக்கமும்!

2 hours ago 14

Last Updated:Mar 08, 2026 11:14 AM IST

TVK Election Promises | மாமல்லபுரத்தில் மகளிர் தின விழாவில் தவெக தலைவர் விஜய், மகளிர் வாக்குறுதிகளை வெளியிட்டார். அவை ஏற்கனவே திமுக, அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைப் போல் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தவெக தலைவர் விஜய், மகளிருக்கான வாக்குறுதிகளை வெளியிட்ட நிலையில், அவை ஏற்கனவே நடைமுறையில் இருந்த திட்டங்கள் பிம்பம் போல் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

மாமல்லபுரத்தில் தவெக சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் சட்டமன்ற தேர்தலில் மகளிருக்கான வாக்குறுதிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார். அதில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மற்றும் நடைமுறையில் உள்ள திட்டங்களின் பெயர்களை மாற்றியும், அல்லது சிறு மாற்றங்களை செய்தும் வாக்குறுதிகளாக விஜய் அறிவித்ததாக கூறப்படுகிறது.

60 வயதுக்குட்பட்ட அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மதிப்புமிகு மகளிர் திட்டம் மூலம் மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என விஜய் அறிவித்தார்.

தற்போதைய திமுக அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கி வரும் நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தருவதாக அறிவித்துள்ளது. அதேநேரம், அதிமுக ஆட்சிக்கு வந்தால் குலவிளக்கு திட்டம் மூலம் மகளிருக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தவெக ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசமாக பயணிக்க உத்தரவிடப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் விடியல் பயணத் திட்டம் மூலம் நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்து வருகின்றனர். அதேநேரம், அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண் பெண் என இருபாலருக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 6 சிலிண்டர் வழங்கப்படும் என விஜய் வாக்குறுதி அளித்த நிலையில், ஆண்டுக்கு 3 சிலிண்டர் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்துள்ளார். இதுதவிர பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டம் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மத்திய அரசும் இலவச சிலிண்டர் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

எல்லா நியாய விலைக்கடைகளிலும் மகளிருக்கு இலவச நாப்கின் வழங்கப்படும் என விஜய் அறிவித்த நிலையில், அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் திட்டம் தொடங்கப்பட்டு அது தற்போதும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்ணன் சீர் திட்டம் மூலம் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும் என விஜய் அறிவித்த நிலையில், அது ஏற்கனவே அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் என்ற பெயரிலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித் தொகை திட்டம் என்ற பெயரிலும் நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும் என விஜய் கூறிய நிலையில், அதிமுக ஆட்சியில் மணமக்களுக்கு பட்டு வேட்டி மற்றும் பட்டு சேலை வழங்கப்படும் என ஈபிஎஸ் வாக்குறுதி அறிவித்துள்ளார்.

தவெக ஆட்சிக்கு வந்தால் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான கல்வி இடைநிற்றலை தவிர்க்க பெற்றோருக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் வழங்கப்படும் என விஜய் அறிவித்த நிலையில், ஆந்திராவில் அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோருக்கு 15 ஆயிரம் ரூபாயை 2019இல் ஜெகன் மோகன் தலைமையிலான அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அதிமுக ஆட்சியில் அம்மா பரிசு பெட்டகம் திட்டம் நடைமுறையில் இருந்த நிலையில், தவெக ஆட்சிக்கு வந்தால் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம் பேபி வெல்கம் கிட் மற்றும் தங்க மோதிரம் வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.

First Published :

Mar 08, 2026 11:14 AM IST

Read Entire Article