இளவயதுப் பெரியவர்களில் அதிகமானோருக்குக் கண் அழுத்த நோய்

2 hours ago 21

2521e235-2211-429c-b158-044b2c32c974

குழந்தைகள் நல்ல கண் பராமரிப்புப் பழக்கவழக்கங்கள் குறித்த நிகழ்ச்சியைப் பார்க்கின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 40, 50 வயதுகளில் உள்ள அதிகமானோருக்குக் கண் அழுத்த நோய் (glaucoma) போன்ற கண் நோய்கள் ஏற்படுகின்றன.

வளரும் பருவத்தில் அவர்களுக்கு இருந்திருக்கக்கூடிய கிட்டப்பார்வைக் குறைபாட்டுக்கு (மையோப்பியா) சிகிச்சை பெறாமல் இருந்தது அதற்குக் காரணமாக இருக்கலாம்.

கிட்டப்பார்வைக் குறைப்பாட்டுக்குச் சிகிச்சை பெறாமல் இருப்பது, கூடுதல் கண் பிரச்சினைகளுக்கு இட்டுச்செல்லக்கூடும் என்று ஆய்வுகள் காட்டியுள்ளன.

அவற்றில் கண் அழுத்த நோயும் ஒன்று.

குழந்தைகளுக்குக் கிட்டப்பார்வைக் குறைபாடு இருக்கிறதா என்பது குறித்துப் பெற்றோர் விழிப்புடன் இருக்கவேண்டும்; அது மோசமாவதைத் தவிர்க்கவும் தடுக்கவும் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புதிதாக நிறுவப்பட்ட சிங்கப்பூர் மையோப்பியா கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அவர்கள் குழந்தைகளின் விழிக்கோளம் நிரந்தரமாக நீளமாவதைத் தடுக்கமுடிந்தால், அவர்கள் வளர்ந்தபிறகு ஏற்படக்கூடிய கடுமையான கண்பார்வை இழப்பைத் தவிர்க்க முடியும்.

சிங்கப்பூர் தேசியக் கண் நிலையம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்படி, கண் அழுத்த நோய்க்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட 40 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டில் 22ஆக இருந்தது. இருப்பினும், 2025ஆம் ஆண்டில் அது கிட்டத்தட்ட மும்மடங்காக, அதாவது 60ஆக பதிவானது.

50 வயதுமுதல் 59 வயதுவரையிலான நோயாளிகளுக்குச் செய்யப்பட்ட அத்தகைய அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டில் 95ஆக இருந்தது. ஆனால், 2025ல் அது கிட்டத்தட்ட இரட்டிப்பாகி 183ஆகப் பதிவானது.

வழக்கமாக, கண் அழுத்த நோய் 60 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதினரைப் பாதிக்கும் என்பதால் அண்மைய போக்கை முக்கியமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தேசியக் கண் நிலையத்தில் உள்ள மையோப்பியா துறையின் இயக்குநர் ஃபூ லி லியென் கூறினார்.

நீரிழிவுக் கண் பரிசோதனை, நிறுவனச் சுகாதாரப் பரிசோதனை போன்ற பரிசோதனைத் திட்டங்களை மேலும் எளிதில் பெறமுடிவதால், நோயாளிகள் கண் அழுத்த நோயை முன்கூட்டியே கண்டுபிடித்திருக்கக்கூடும் என்றும் அதனால், இளம் நோயாளிகளுக்குக் கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் கிட்டப்பார்வைக் குறைபாடு முக்கியப் பொதுச் சுகாதாரப் பிரச்சினையாகத் தொடர்ந்து நீடிப்பதால், பார்வைத் திறன் நிபுணர்கள், கண் மருத்துவர்கள், குழந்தைநல மருத்துவர்கள், பொது மருத்துவர்கள், கண் பராமரிப்பு, பார்வை அறிவியல் துறை ஆராய்ச்சியாளர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து சிங்கப்பூர் மையோப்பியா கழகத்தைத் தொடங்கினர்.

Read Entire Article